அற்புதப்பட்டினம்...!
படத்தைப் பற்றிப் புகழ்ந்தால் காட்சிக்குக் காட்சிப் புகழலாம்... அப்படி ஒரு நேர்த்தி! மென்மையாக மிரட்டி இருக்கிறார்கள்...!
படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை, கொஞ்சம் கூட சொதப்பலே இல்லாமல், மிகவும் நேர்த்தியாகத் திரைக்கதையை நகர்த்திச் சென்ற விதம் அற்புதம்.
ஆர்யா (பரிதி) அறிமுகமாகும் தருணத்திலேயே படம் மனிதர்களைப் பற்றியது என்பது தெளிவாகிறது... (இப்பொழுதெல்லாம் மனிதர்களைப் பற்றிப் படம் எடுப்பதைவிட மனிதர்களைக் கொண்டு அடாவடித்தனத்தையும் அதிகப் பிரசங்கித்தனமான பன்ச் டயலாக் என்று சொல்லக் கூடிய உறுமல்களைப் படமாக்குவது மட்டுமே கலாச்சாரமாக இருக்கின்றன).
1940 மற்றும் 2010... இந்த இரண்டு கால கட்டங்களையும் அற்புதமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறார்கள். வயதான ஏமி இந்தியாவிற்கு வருவதை, அவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் முதல் முறை இந்தியா வந்ததையும் மாற்றி மாற்றிக் காட்சிகள் அமைத்து முத்துச் சரம் போல் கோர்த்துத் தொடுத்திருப்பதில் எடிட்டிங் மிகவும் கச்சிதமாக இருக்கிறது.
படம் முழுக்க இசையும் ஒளிப்பதிவும் அற்புதமாகக் கைகோர்த்துக்கொண்டு போகின்றன.
நெகிழ்வான தருணங்களை நெகிழ்வாகவும் பதற்றமான சூழலைப் பதற்றமாகவும் வைத்திருக்க எடிட்டிங், இசை மற்றும் ஒளிப்பதிவு மூன்றும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்திருக்கின்றன...!
அன்றைய மதராசப்பட்டினத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்... கலை இயக்குனர். எப்படி எடுத்தார்கள் என்று ஆச்சர்யப்படும் அளவிற்குப் படம் முழுக்கக் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக... கூவம் நதி(!)யில் ஓடம் போகும் போது பின்னணியில் சென்ட்ரல் ஸ்டேஷன் தெரிவது அற்புதம்.
பொதுவாக பாடல் காட்சிகள் கதையோட்டத்தை விட்டு, அளவுக்கு அதிகமாகவே எல்லை தாண்டிப் போவதுண்டு... ஆனால், கதை மற்றும் கதாப்பாத்திரத்தின் தன்மையை ஒட்டி பாடல் காட்சிகள் வடிவமைக்கப் பட்டிருப்பது கதைப் போக்கிற்கு நெருடலாக இல்லாமல் இருக்கிறது. உதாரணமாக, கிராமத்தில் எல்லோரும் சந்தோஷமாக நடனமாடிக்கொண்டிருக்கும் சமயம், பரிதியுடன் கைகோர்த்து நடனமாட முனைகிறார் ஏமி. அப்படியே ஆடுவதை நிறுத்துகிற பரிதி அவரிடமிருந்து கையை மெதுவாக விடுவித்துக் கொள்கிறார். சில கணங்களில் பரிதியின் தங்கை நடனமாடியபடி ஏமியை கைகோர்த்து இழுத்துச் செல்கிறார்... பரிதியின் கலாச்சாரம் சார்ந்த பிரக்ஞை வெளிப்படுவதுடன்... இக்கட்டான சூழலில் பரிதியின் தங்கையின் சாதுரியம் சிரத்தையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மற்றொரு சமயம் பரிதியின் வீட்டிற்குள் நுழையும் ஏமி, தலையை நிலைப்படியில் இடித்துக்கொண்டுவிட உடனே பரிதி தன் தங்கையின் கையை எடுத்து ஏமியின் தலையில் வைத்து ஏமியின் தலையைத் தேய்த்து விடுவது போன்ற காட்சிகள்... எவ்வளவு தூரம் கதையின் கால கட்டத்தையும் கதாப்பாத்திரத்தின் தன்மைகளையும் மிகவும் கவனமுடன் கையாண்டிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணங்கள்.
மணிக்கூண்டில் ஏமியும் பரிதியும் பதுங்கி இருக்கும் இறுதிக்கட்டக் காட்சியில் பரிதியின் அருகில் படுத்தபடி ஏமி ஆங்கிலத்தில் இயல்பாகக் காதல் படிப்பது கவிதை.
1947, ஆகஸ்ட் 15 அன்று பரிதியும் ஏமியும் தப்பித்துப் போகும் போது ஏமியின் ஆடையில், ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி தேசியக் கொடியைக் குத்திவிடுவதும் பிறகு ஏமி ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி என்று தெரிந்ததும் அந்தக் கொடியை அகற்ற முற்படுவதும், ஏமி அதைத் தடுப்பதும் கவிதையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே கொடியைப் பார்த்து, ஏமிக்கு நிச்சயிக்கப்பட்ட பிரிட்டிஷ் காரர் 'இந்தியக் கொடியை அணிந்திருப்பது அவமானமாக இல்லையா...?' என்று கேட்க... 'இல்லை பெருமையாக இருக்கிறது...!' என்று ஏமி பதில் சொல்வதும் பளிச் வசனங்கள்...!
வயதான ஏமி மீண்டும் இந்தியாவிற்கு வரும் போது, சுதந்திர தினத்தன்று அவருக்கு தேசியக் கொடியை அணிவிப்பதும் அவர் அதில் நெகிழவதுமாக... தொடர்ந்து பின்னி எடுக்கிறார்கள்...
பரிதி ஏமிக்குத் தாலியைக் கொடுத்து விட்டு,
"தமிழ் நாட்டுல தாலிங்கிறது ஒரு பொண்ணுக்கு எவ்ளோ முக்கியம் தெரியுமா"ன்னு ஆரம்பிச்சு... அந்தத் தாலியைக் கொடுத்துட்டதாலேயே
"டேய்... எவனாவது என்னோட ஏமி மேல கைவச்சுப் பாருங்கடா... என்னைத் தாண்டி எவனாச்சும் ஏமியைத் தூக்கிட்டுப் போகணும்'னு நினைச்சீங்க... அவன் மட்டும் இல்லை... அவன் ஆத்தா, அப்பன்... இறந்து போன அவனோட தாத்தா பாட்டி உட்பட யாருமே உயிரோடு இங்கேர்ந்து திரும்பிப் போக முடியாது..." போன்ற உறுமல்கள் இல்லாமல்...
"இது உனக்குத் தான். கொடுத்துட்டேன்... இனி வாழ்வோ சாவோ உனக்கு இந்த மண்ணுல தான்..."
-என்று, கச்சிதமாக வசனம் பேசியதற்கு நன்றி...!
வயதான ஏமி மயக்கம் போட்டு விழும் போது, இதே காட்சியை மறுபடியும் பொருத்தமான இடத்தில் அசரீரியாக மட்டுமல்லாமல் முழுவதுமாகக் காட்டுவதும், தொடர்ந்து காட்சிகளே இல்லாமல், வெறும் ஒலியைக் கொண்டே திரையை நிரப்பியதும் சிறந்த உத்திகள்.
1947, ஆகஸ்ட் 3 அன்று இரவு, இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதைப் பற்றி வெள்ளைக்கார துரைமார்களுடன் நம்மவர்கள் விவாதம் நடத்திக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் பரிதியும் ஏமியும் பரிதியின் வீட்டில் பேசிக் கொள்ளும் காட்சிகள், மாறி மாறி ஊடாக வருகின்றன. பரிதிக்கும் ஏமிக்குமான அந்த அற்புதமான நெகிழ்வான தருணங்களை முடிந்தவரைக் கொஞ்சம் ஒட்டு மொத்தமாகக் காட்டி இருந்தால் இன்னும் அந்தக் காட்சிக்கு பலம் கூடி இருக்கும். பரிதி மற்றும் ஏமியின் உரையாடல் மற்றும் பார்வையில் இருந்த கனமான நெகிழ்ச்சியை முழுவதுமாக பார்வையாளன் அனுபவிக்க முடியாமல் இடையூறாக இருந்தது இடையிடையே வந்து போன வெள்ளைக்காரர்களுடனான பேச்சு வார்த்தை பற்றிய காட்சிகள்.
நகைச்சுவைக்கென தனியாக ஒரு ரோடு போடாமல், இயல்பாகவே படத்திலேயே கலந்திருப்பது அற்புதம். அதுவும், நகைச்சுவை பெரும்பாலும் கதாப் பாத்திரங்களின் குணாதிசயத்தினால் வெளிப்படுவதுதான் முதல் தரம்... அது படம் முழுக்க இழையோடுகிறது. எ... பி... சி... மறக்கமுடியாத ஒரு நகைச்சுவை...!
தமிழர் பண்பாடு பற்றி மேடைக்கு மேடை பேசும் நாம், மார்புப் பிளவுகள் மற்றும் தொப்புள் காட்சிகள் இல்லாமல் படங்கள் எடுப்பது குறைவு தான் என்பதை வருத்தத்துடன் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால்... வெள்ளைக்காரி கதாநாயகியாக இருந்தும் படத்தில் அது போன்ற காட்சிகளே இல்லாமல் எடுத்திருப்பது மனமாரப் பாராட்டப் பட வேண்டிய விஷயம். இப்பொழுதெல்லாம் தமிழ்ப் பாடல்களில் வெள்ளைக்காரப் பெண்மணிகள் துண்டு ஆடைகட்டி ஆடும் போது, ஏமிக்குச் சேலை கட்டி அழகு பார்த்த விதம் அற்புதம்.
ஆருயிரே பாடலில் ஏமியின் தமிழ் உச்சரிப்பு கணக் கச்சிதமாக இருக்கிறது. வழக்கமாகத் தமிழ்ப் படங்களுக்கு தமிழ் தெரியாத மற்றும் தமிழகத்தைச் சேர்ந்திராத பெண்ணாகப் பார்த்துத் தெரிவு செய்வதால், சாயலில் 'ஒல்லியான - கன்னத்தில் குழி விழாத பிரீத்தி ஜிந்தா' போல் இருக்கும் ஏமி நம் தமிழகக் கனவுக் கன்னியாக இன்னும் சில வருடங்கள் மின்னிக்கொண்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை... மேலும், அதற்கான அத்தனைத் தகுதியையும் அவர் கொண்டிருக்கிறார்.
ஆருயிரே பாடலின் ஒளிப்பதிவும் கேமராவின் நகர்வுகளும் அற்புதமாக இருக்கின்றன. மென்மையாக மிரட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆருயிரே பாடலில் ஆர்யாவின் தோற்றம் அசத்தல். சாக்கலேட் பையனாக இல்லாமல்... ஒரு ராஜகுமாரனுக்கான எல்லா அம்சங்களும் பொருந்தியவராக வருகிறார் இந்தப் பாடலில். சோழர்களது வரலாற்றையோ அல்லது ஏதேனும் ஒரு அரசகுலத் திரைக்கதையையோ படமாக்க நினைத்தால், அதற்கான ஸ்க்ரீன் டெஸ்ட் தான் உயிரே உயிரே பாடலில் ஆர்யாவின் தோற்றம். ' நான் கடவுள்' மற்றும் 'மதராசப்பட்டின'ங்களைக் கடந்து போகக் கூடிய வலிமை இருக்கிறது இந்தப் புதிய இராஜகுமாரனுக்கு! இவரைத் தமிழ்த் திரையுலகம் உறுமல்கள் இல்லாத படங்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டால் எல்லோருக்கும் நல்லது!
வாம்மா துரையம்மா... மேகமே ஓ மேகமே... பாடல்கள் படமாக்கியவிதம் அருமை.
பாடல் வரிகளில்... வைரங்களைக் கடந்து போகும் முத்தாக ஜொலிக்கிறார்... நா.முத்துக்குமார்.
பாடல்களில் ஜி வி பிரகாஷ், பாடல் வரிகளைச் சிதைத்து விடாமல் தாலாட்டி இருக்கிறார்...!
நடிப்பில் எல்லோரும் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறார்கள்.
பரிதி, ஏமி (பிரிட்டிஷ் பெண்மணி) மற்றும் ஏமிக்கு நிச்சயிக்கப் பட்ட பிரிட்டிஷ்காரர் இவர்கள் தான் கதையின் மையப்புள்ளி... என்றாலும் குஸ்தி வாத்தியாராக வரும் நாசர் அநாயாசமாக அவர்களுக்குச் சமமாக இடம் பிடித்துக் கொள்கிறார்... கொஞ்ச நெஞ்ச அனுபவமா என்ன அவருக்கு...?
அவரது குஸ்தி வாழ்க்கையைக் கேலி செய்யும் போதாக இருக்கட்டும், கடைசில் அதே குஸ்தி ஒரு கிராமத்தையே காப்பாற்றும்போது அவர் அங்கீகரிக்கப்படும் போதாக இருக்கட்டும்... அற்புதமாகக் கையாள்கிறார்... நாசர்.
குணச்சித்திரத்தில் அடுத்து நான்கு பேர் இடம் பிடித்துக்கொள்கிறார்கள்... நொள்ளைக்கண் மனிதர், மொழி பெயர்ப்பாளர், டாக்ஸி டிரைவர் மற்றும் ஆர்யாவின் தங்கையாக வருபவர்.
நொள்ளைக்கண் மனிதர் படத்திற்குப் படம் மிளிறிக்கொண்டே இருக்கிறார்... "முதலில் வயிறு... அப்புறம் தான் தேசமெல்லாம்..." என்று சொல்லும் போது அந்த எதார்த்தத்தை, அதிகப்படியாக நடித்துவிடாமல், உள்ளது உள்ளபடியே பதிவு செய்கிறார்.
ஆர்யாவின் தங்கை வெகு இயல்பாகவும் எளிமையாகவும் அவரது பாத்திரத்திற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
ஆங்கில நடிகர்களில் ஏமியின் தந்தையும் அவரது இரண்டாவது மனைவியும் மற்றும் ஏமிக்கு நிச்சயிக்கப்பட்டவரும் தங்களது பங்கை சிறப்பாக ஆற்றி இருக்கிறார்கள். இவர்களுக்கிடையிலான உரையாடல்கள் அவர்களுடைய இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்வதாக இருப்பதால் ஆங்கிலப் படம் பார்க்கும் தொனியை ஏற்படுத்துகிறது! ஆக, அயல் நடிகர்களை இயக்கி இருப்பதிலும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
படத்தில் நுணுக்கமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. எதுவும் விட்டுப் போகாமல் எல்லாவற்றையும் மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, பார்வையாளனை முட்டாளாக நினைத்துக்கொண்டு எல்லா விஷயங்களையும் வசனங்களாகவே வெளிப்படையாகச் சொல்லிக்காட்டாமல் காட்சி அமைப்புகளிலேயே புரிய வைக்கும் தரம் அற்புதம்.
இருந்தாலும், ஒரு சில நெருடல்கள்...
வெள்ளைகாரர்கள் நடனமாடும் இடத்தில் வெள்ளைக்காரப் பெண்களுடன் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுடன், திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்தவர்கள் நடனமாடுவதென்பது இயலாத காரியம்... வெள்ளைக்காரப் பெண்கள் என்பதால் அவர்கள் குடித்து விட்டால் எந்த ஆண் மகனுடன் நடனமாடுகிறோம் என்பதே தெரியாமல், அதுவும் முகத்தைக் கூடப் பார்க்காமல் அந்த ஆணின் மார்பில் சாய்ந்து கொண்டு நடனமாடுவார் என்பது கொஞ்சம் அதிகப் படியான கற்பனை.
பரிதி துப்பாக்கிக்குப் பலியாகாமல் தப்பித்துப் போகும் காட்சியில் தண்ணீருக்குள் இருக்கும் பரிதியைத் தேடி ஒரே நேரத்தில் வரும் நான்கு காவலாளிகளில் இருவரின் கழுத்தை பரிதி நெரித்துக் கொல்லும் போது, மூன்றாமவர் பரிதியின் கழுத்தை நெரிப்பதும் நான்காமவர் துப்பாக்கியை வைத்துக்கொண்டு காத்திருப்பதும் சினிமாத்தனம். முதல் மூவரும் இறந்த பிறகு நான்காமவர் துப்பாக்கியால் சுடாமல் அதைக்கொண்டு தாக்க முயல்வதும் தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்கள்...
பரிதி ஏமியுடன் தப்பிப் போகும் கடைசிக் காட்சிகளில், புகைவண்டியின் மீது ஓடுவதும் அப்போது உள்ளிருந்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும்... சில கணங்களில்... அவர்கள் கட்டிடத்திற்குள் தப்பியோடிக் கொண்டிருப்பதும் பொருந்தாத 'தொடர் காட்சிகள்'. சிரமப் பட்டு எடுத்துவிட்டோம் என்பதற்காக மட்டுமே புகைவண்டிக் காட்சியை வைத்தது போலாகிவிட்டது.
எனக்குத் தெரிந்தவரை இந்த மூன்று உறுத்தலான நெருடல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால்... படம்... அற்புதமாகவும் மிகவும் தரமானதாகவும் வந்திருக்கிறது.
முற்பாதி மற்றும் பிற்பாதியில் நிகழும் நிகழ்வுகளை கச்சிதமாக இணைத்திருக்கும் நேர்த்தியைப் பார்த்தால், காட்சிக்குக் காட்சி சுத்தமாக எழுதி வைத்துச் சரி பார்த்த பிறகே படமெடுத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. இல்லையென்றால், ஆங்காங்கே லாஜிக் பல்லிளித்திருக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.
மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
மீண்டும், அடுத்த... 'இயக்குனர் விஜய்' படத்திற்காகக் காத்திருப்போம்...!!!
நன்றி!